Friday, September 4, 2015


காரீயம்
செய்தித்தாள் என்ற தமிழ் வார்த்தையை விட ஆங்கில வார்த்தையான ‘நியூஸ் பேப்பர்‘ என்பதைத்தான் நாம் பேச்சு வழக்கில் அதிகம் பயன்படுத்துகிறோம். செய்தித்தாள்கள், செய்தி படிப்பதற்கு என்ற நிலையைக் கடந்து பல பயன்பாடுகளுக்கு உபயோகமாகிறது என்பது மகிழ்ச்சியான விஷயமே! ஆனால் அதிலும் சிலவகை பயன்பாடுகளில் ஆபத்து இருக்கிறது என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள். 

அதில் ஒன்றுதான் செய்தித்தாளில் கை துடைப்பது. சிறிய ஓட்டல்கள், தெருவோர உணவகங்களில் சாப்பிட்டு கைகழுவிய பின், ஈரமான கைகளை துடைப்பதற்கு பழைய செய்தித்தாள்களை கத்தரித்து வைத்திருப்பார்கள். அவற்றில் நம் கையை துடைக்கும் போது, நமது உடலுக்குள் காரீயம் சென்றுவிடுகிறது. 

எப்படி என்கிறீர்களா? செய்தித்தாளின் அச்சு மையில் காரீயம் உள்ளது. அது உலர்வாக இருக்கும்வரை எந்த பிரச்சினையும் இல்லை. தண்ணீர் பட்டால், பிரச்சினைதான். இது கூட பரவாயில்லை. பலரும் வடை, பஜ்ஜி போன்ற எண்ணெய்ப் பலகாரங்களில் உள்ள எண்ணையை வெளியேற்ற செய்தித்தாள்களை பயன்படுத்துகிறார்கள். இது அதைவிட மிகப் பெரிய ஆபத்து. காரீயம் நேரடியாக உணவுக் குழாய்க்குள் சென்று விடும். . 

காரீயம் உடலுக்குள் சென்றால் அது சிறுநீரகம், கல்லீரல், எலும்பு வளர்ச்சி, தசை வளர்ச்சி என்று எல்லாவற்றையும் பாதிக்கும். இப்படி கெடுதல் விளைவிக்கும் சில பொருட்கள் உடலுக்குள் சென்றால், காலப்போக்கில் அது கழிவாக வெளியே வந்துவிடும். ஆனால் காரீயத்தின் கதை வேறு. அது கழிவாக வெளியே செல்வதில்லை. தொடர்ந்து காரீயம் உள்ளே போகப் போக சேர்ந்து கொண்டே போகும். கெடுதல்கள் கூடிக்கொண்டே போகும். 

நிறைய பேர் காரீயம் என்றால் அது ஈயம், அலுமினியம் என்று நினைக்கிறார்கள். அது தவறு. காரீயம் வேறு, இவை வேறு. ஈயமும் அலுமினியமும் நமக்கு கெடுதல் தராத உலோகங்கள். எவர்சில்வர் பாத்திரங்கள் வருவதற்கு முன்பு நமது சமையல் அறைகளை ஆட்சி செய்தவை, ஈயம் பூசப்பட்ட பித்தளைப் பாத்திரங்களும், அலுமினியப் பாத்திரங்களும்தான். அதனால் அவை கெடுதல் இல்லை. காரீயம் தான் கெடுதல். 

 முன்பெல்லாம் பெட்ரோலில் கூட காரீயம் இருந்தது. அது வாகனப்புகை மூலம் காற்றின் வழியாக மனித நுரையீரலுக்குள் தஞ்சம் அடைந்தது. இப்போது பெட்ரோலில் காரீயம் நீக்கப்பட்டு விட்டது. சில உலோகங்கள் ஓரளவுக்கு உடலில் இருக்கலாம் அது கெடுதல் தராது என்பார்கள். ஆனால் காரீயம் சிறிதளவு உடலுக்குள் சென்றால் கூட கெடுதல்தான். அதனால்தான் மேகி நூடுல்சுக்கு அவ்வளவு பெரிய எதிர்ப்பு வந்து, தடை செய்யப்பட்டது.

கரும்பு ஒரு கசப்பான வரலாறு
இன்று உலகம் முழுக்கவே கரும்பு பெரும் விவசாய விளைபொருளாக இருக்கிறது. உலகில் உற்பத்தி செய்யப்படும் சர்க்கரையில் பெருமளவு கரும்பில் இருந்து தான் தயாரிக்கப்படுகிறது. கரும்புச்சாறு தந்த ருசியில் மயங்கிய மாவீரன் அலெக்சாண்டரின் படைத் தளபதி, ‘தேனீக்களே இல்லாமல் தேனை அள்ளித்தரும் ஓர் அற்புதச் செடி’ என்று கரும்பை வர்ணித்தார். சுமார் 8 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தென் பசிபிக் தீவுகளில் கரும்பு முதல் முறையாகப் பயிரிடப்பட்டது. இந்தியாவில் கி.மு. 500-ம் ஆண்டிலேயே கரும்பில் இருந்து சர்க்கரை தயாரிக்கும் முறையை தெரிந்து வைத்திருந்தார்கள். கி.மு.100-ம் ஆண்டில் இந்த முறை சீனாவுக்குப் பரவியது. சர்க்கரை என்ற வார்த்தை சமஸ்கிருத மொழியின் ‘சர்க்கரா’ என்ற சொல்லில் இருந்து வந்தது தான். கி.பி. 636-ம் ஆண்டு ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்ட கரும்பு, இன்று 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பயிர் செய்யப்படுகிறது. உலகில் 70 சதவீதத்திற்கும் அதிகமான சர்க்கரை கரும்பிலிருந்து தான் தயாரிக்கப்படுகிறது. இனிப்பான கரும்பிற்குப் பின்னால் ஒரு கசப்பான கண்ணீர்க் கதையும் உண்டு. தெரிந்தோ தெரியாமலோ அடிமைகள் வியாபார உலகில் பெருமளவு உருவாவதற்கு கரும்பு ஒரு முக்கிய காரணமாக இருந்தது. ஐரோப்பிய நாடுகளின் காலனிகளாக இருந்த தென் அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளில் ஏராளமான கரும்புத்தோட்டங்கள் அப்போது இருந்தன. அவற்றில் குறைந்த கூலியில் வேலை செய்ய அதிகமான ஆட்கள் மிக தேவைப்பட்டார்கள். ஐரோப்பிய நாடுகள் கப்பல் கப்பலாக பொருட்களை மேற்கு ஆப்பிரிக்காவிற்கு அனுப்பி, அதற்கு பதிலாக அடிமைகளை பண்டமாற்று முறையில் விலைக்கு வாங்கினார்கள். அந்த அடிமைகள் கரும்புத் தோட்ட முதலாளிகளிடம் அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டார்கள். தோட்ட முதலாளிகள் அடிமைகளை ஆடு, மாடுகளைப் போல கேவலமாக நடத்தினர். கி.பி.18-ம் நூற்றாண்டில் கரும்புத்தோட்டங்களில் வேலை செய்ய ஒரு வருடத்திற்கு சுமார் 50 ஆயிரம் அடிமைகள் இங்கிலாந்து கப்பல்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டனர். இப்படி அடிமைகள் பெருமளவு உருவாவதற்கு கரும்பு மிக முக்கியமான காரணமாக மாறிவிட்டது. இனிக்கும் கரும்பிற்குப் பின்னால் இருக்கும் இந்த கசப்பான வரலாறு இன்றைய தலைமுறை அறியாதது.