Friday, April 22, 2016


அடுத்த இரண்டு ஆண்டுகளில்
இந்தியாவில், 30 லட்சம் டன் மின்னணு கழிவுகள் உருவாகும்
ஆய்வறிக்கையில் தகவல் 

சுதானுகா கோசல் கொல்கத்தா 23/04/2016

இந்தியாவில், அடுத்த இரண்டு ஆண்டுகளில் (2018-ஆம் ஆண்டிற்குள்), 30 லட்சம் டன் மின்னணு கழிவுகள் உருவாகும் என அசோசெம் மற்றும் பிராஸ்ட் அண்டு சல்லிவான் கூட்டு ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய தகவல்கள்

அசோசெம் மற்றும் பிராஸ்ட் அண்டு சல்லிவான் கூட்டு ஆய்வறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:-

இந்தியாவில், 2018-ஆம் ஆண்டில், 30 லட்சம் டன் மின்னணு கழிவுகள் உருவாகும். தற்போது இந்தியா ஆண்டுக்கு 18.5 லட்சம் டன் மின்னணு கழிவுகளை உருவாக்கி வருகிறது.

எட்டு பெரிய நகரங்களில் மும்பையில் மின்னணு கழிவுகள் அதிகமாக உள்ளது. அங்கு அதிகபட்சமாக ஆண்டுக்கு 1.20 லட்சம் டன் கழிவுகள் உருவாகிறது. அடுத்து டெல்லி - என்.சி.ஆர். பகுதி 98 ஆயிரம் டன், பெங்களூரு 92 ஆயிரம் டன் கழிவுகளை வெளியிடுகின்றன. சென்னை (67,000 டன்), கொல்கத்தா (55,000 டன்), அகமதாபாத் (36,000 டன்), ஐதராபாத் (32,000 டன்) மற்றும் பூனா (26,000 டன்) ஆகிய நகரங்களும் மின்னணு கழிவுகளை குவிக்கின்றன.

மறுசுழற்சி

இந்தியாவில் உருவாகும் மொத்த மின்னணு கழிவுகளில் 2.5 சதவீதம் மட்டுமே நாட்டில் உள்ள குறைந்தபட்ச தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி, மறுசுழற்சி செய்யப்படுகிறது. மீதமுள்ள கழிவுகளால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. தொழிற்சாலைகளில் பணியாற்றுபவர்களின் உடல் நலம் கெடுகிறது. 95 சதவீதத்திற்கும் மேலான மின்னணு கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கு பதிலாக, அவற்றை பிரித்து கையாளும் பணிகளில் பல்வேறு அமைப்பு சாரா நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இதில், 10 முதல் 14 வயதுக்குட்பட்ட சுமார் 5 லட்சம் சிறார்களே பெரும்பாலும் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனால் ஏற்படும் அபாயங்கள் குறித்து நம் நாட்டில் போதிய அளவு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுகள் இல்லை.

கம்ப்யூட்டர் 

மின்னணு கழிவுகளில் கம்ப்யூட்டர் மற்றும் அதன் உதிரிபாகங்களின் பங்கு அதிகபட்சமாக 70 சதவீத அளவிற்கு உள்ளது. அடுத்து, தொலைத்தொடர்பு சாதனங்கள் (12 சதவீதம்), மின்சார உபகரணங்கள் (8 சதவீதம்) மற்றும் மருத்துவ கருவிகள் (7 சதவீதம்) இருக்கின்றன. இவை தவிர, பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்களின் பங்கு 4 சதவீதமாக உள்ளது.

ஒட்டுமொத்த அளவில், மின்னணு கழிவுகளை உருவாக்குவதில் பொது மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த தொழிற்சாலைகளின் பங்கு 70 சதவீதமாக உள்ளது. அதே சமயம், வீடுகளில் உருவாகும் மின் கழிவுகளின் பங்கு 15 சதவீதமாக உள்ளது. வீடுகளில் இருந்து வெளிவரும் மின்னணு கழிவுகளில் டெலிவிஷன், பிரிட்ஜ் மற்றும் வாஷிங் மெஷின் ஆகியவை மிக அதிக பங்கினைக் கொண்டுள்ள நிலையில், கம்ப்யூட்டர்களின் பங்கு 20 சதவீதமாகவும், மொபைல்போன்களின் பங்கு 2 சதவீதமாகவும் இருக்கிறது.

பாதிப்புகள்

கம்ப்யூட்டர், டி.வி., மொபைல்போன் மற்றும் பிரிட்ஜ் ஆகியவற்றில் நச்சுத்தன்மை  இருப்பதால்,  மண்வளம் பாதிக்கப்படுகிறது. மேலும் நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. இதன் காரணமாக, தலைவலி, வாந்தி, மயக்கம், மற்றும் கண்வலி போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. மின்னணு கழிவுகளை மறுசுழற்சி செய்யும் பணிகளில் ஈடுபட்டிருப்பவர்கள் குடல், சிறுநீரகம் மற்றும் நரம்பு மண்டல பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.

இவ்வாறு அசோசெம் மற்றும் பிராஸ்ட் அண்டு சல்லிவான் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, April 21, 2016



நான்காவது காலாண்டு இறுதியில்
வங்கிகளின் மொத்த வாராக்கடன் ரூ.10 லட்சம் கோடியை எட்டியிருக்கும்
 
அசோசெம் ஆய்வறிக்கையில் தகவல்
 (இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு)

புதுடெல்லி-21/04/2016

கடந்த 2015-16-ஆம் நிதி ஆண்டில், நான்காவது காலாண்டு (ஜனவரி - மார்ச்) இறுதியில் வங்கிகளின்  மொத்த  வாராக்கடன் மற்றும் மறுசீரமைத்த கடன் ரூ.10 லட்சம் கோடியை எட்டியிருக்கும் என தொழில்துறை அமைப்பான அசோசெம் தனது ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

மூன்றாவது காலாண்டில்...

சென்ற நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் (அக்டோபர்-டிசம்பர்) வங்கிகளின் மொத்த வாராக்கடன் ரூ.8 லட்சம் கோடியாக இருந்தது. நான்காவது காலாண்டில் அது ரூ.10 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கும் என அசோசெம் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015-ஆம் ஆண்டு மார்ச்  மாதத்தில்,  பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் ரூ.2.67 லட்சம் கோடியாக இருந்தது. அந்த ஆண்டு இறுதியில் அது ரூ.3.61 லட்சம் கோடியாக அதிகரித்தது. இதே காலத்தில் தனியார் வங்கிகளின் மொத்த வாராக்கடன் ரூ.31,576 கோடியில் இருந்து ரூ.39,859 கோடியாக உயர்ந்துள்ளது என அந்த ஆய்வறிக்கை மேலும் கூறுகிறது.

லாப வரம்பு

வாராக்கடன் அதிகரித்ததால் அனைத்து வங்கிகளின் லாபம் வரம்பு கடுமையாக பாதிப்படையும் நிலை ஏற்பட்டிருக்கிறது. கடந்த நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் (அக்டோபர்-டிசம்பர்) பொதுத்துறையைச் சேர்ந்த 11 வங்கிகள் கடும் இடர்பாட்டை எதிர்கொண்டன. வாராக்கடன் மற்றும் அதற்கான ஒதுக்கீடு அதிகரிப்பால் அந்த வங்கிகளுக்கு ஒட்டுமொத்த அளவில் ரூ.12,867 கோடி இழப்பு ஏற்பட்டது.

அப்போது பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் உள்ளிட்ட சில முன்னணி வங்கிகளின் நிகர லாபம் கடுமையாக குறைந்திருந்தது. இதில் பாரத ஸ்டேட் வங்கி பெரும் சரிவை சந்தித்தது. அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் இவ்வங்கி ரூ.1,115 கோடி நிகர லாபம் ஈட்டி இருந்தது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் இது 61 சதவீதம் குறைவாகும். பஞ்சாப் நேஷனல் வங்கி, 93 சதவீத சரிவுடன் ரூ.51 கோடி நிகர லாபம் ஈட்டியது. முந்தைய நிதி ஆண்டின் இதே காலத்தில் அது ரூ.775 கோடியாக இருந்தது.

வாராக்கடனாகும் அபாயம்

இந்த நிலையில், பிரான்சு நாட்டைச் சேர்ந்த நிதிச்சேவை நிறுவனமான பீ.என்.பி. பரிபாஸின் கணிப்புகள் கவலையளிக்கும் வித்தில் இருக்கின்றன. இந்நிறுவனத்தின் மதிப்பீடுகளின்படி இந்திய வங்கிகள் வழங்கிய மொத்த கடனான 1,10,900 கோடி டாலரில் 16 சதவீதம் (17,800 கோடி டாலர்) வாராக்கடனாகும் அபாயம் உள்ளது. அடுத்து இந்தோனேஷியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் வங்கிகள் வழங்கிய மொத்த கடனில் முறையே 7.2 மற்றும் 6.6 சதவீதம் வாராக்கடனாகும் ஆபத்து இருக்கிறது.

இந்தோனேஷிய வங்கிகளின் மொத்த கடனான 30,500 கோடி டாலரில் 2,200 கோடி டாலர் வாராக்கடன் அபாயத்தை சந்திக்க உள்ளது. சீன வங்கிகள் வழங்கிய மொத்த கடனில் 1,05,000 கோடி டாலர் வாராக்கடனாகும் நிலையில் உள்ளது என பீ.என்.பி. பரிபாஸ் எச்சரிக்கை செய்திருக்கிறது.

ஆசிய நாடுகள்

ஆசிய நாடுகளில், பங்குச்சந்தை பட்டியலில் உள்ள 738 வங்கிகள் வழங்கிய மொத்த கடன் 1.7 லட்சம் கோடி டாலராக உள்ளது. கொரியா நாட்டு வங்கிகளின் வாராக்கடன் 5.8 சதவீதத்தையும், தாய்லாந்து நாட்டு வங்கிகளின் வாராக்கடன் 2.4 சதவீதத்தையும் எட்டும் நிலையில் உள்ளன என பிரான்சு நாட்டின் பீ.என்.பி. பரிபாஸ் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

வறண்டு போகும் பெட்ரோல் கிணறுகள் 15/04/2016

பெட்ரோல் இன்னும் எத்தனை நாட்களுக்கு? இதுதான் உலகம் நடுங்கியபடி தன்னைத்தானே கேட்டுக்கொள்ளும் கேள்வி. அதிகரித்து வரும் பயன்பாட்டுக்கு இடையே இந்த கேள்வி மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

உலகம் முழுவதும் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட எண்ணெய் வளத்தையும், அதன் சராசரி உற்பத்தியையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது இன்னும் 40 வருடங்களுக்கு தான் எண்ணெய் கிடைக்கும் என்று ஒரு கணக்கீடு சொல்கிறது.

உலகம் முழுவதும் சுமார் 1.24 லட்சம் கோடி பீப்பாய் எண்ணெய் இருப்பு உள்ளது. இதில் சவுதி அரேபியா 21.3 சதவீதமும், ஈரான் 11.2 சதவீதமும் இருப்பு வைத்துள்ளன. பெட்ரோல் உற்பத்தியில் சவுதி அரேபியாவே முன்னிலையில் உள்ளது. ஒரு காலத்தில் ரஷியாவே அதிகமாக எண்ணெய் உற்பத்தி  செய்து கொண்டிருந்தது. ஆனாலும், ஏற்றுமதியில் சவுதியே முன்னிலையில் இருந்தது. ரஷியாவில் எடுக்கப்படும் எண்ணெய்யில் பாதிக்கு மேல் அந்த நாட்டிலே செலவாகிவிடுகிறது.

ஒவ்வொரு நாளும் உலகம் முழுவதும் உற்பத்தியாகும் மொத்த பெட்ரோலில் 25 சதவீதம் அமெரிக்காவே பயன்படுத்துகிறது. அதற்கடுத்து சீனா 9.3 சதவீதம் பயன்படுத்துகிறது. ஜப்பான் 5.8, இந்தியா 3.3, ரஷியா 3.2, கனடா 2.6, சவுதி அரேபியா 2.5, பிரேசில் 2.4 சதவீதம் என்ற கணக்கில் பெட்ரோலை பயன்படுத்துகின்றன. உற்பத்தியில் முதன்மையாக உள்ள சவுதி அரேபியாவில் தினமும் 12.8 சதவீதம் உற்பத்தி செய்யப்படுகிறது. ரஷியா 12.6 சதவீதம், அமெரிக்கா 8.1 சதவீதம், ஈரான் 5.4, சீனா 4.8, மெக்ஸிகோ 4.4, கனடா 4.1, வெனிசுலா 3.4, குவைத் 3.3 சதவீதம் என்ற அளவில் தினமும் எண்ணெய் உற்பத்தியாகிறது.

எண்ணெய் இருப்பு உள்ள நாடுகளில், எத்தனை ஆண்டுகள் எண்ணெய் வளம் இருக்கும் என்பதை நிபுணர்கள் ஆய்வு செய்து கூறியுள்ளனர். அதன்படி சவுதி அரேபியாவில் 69.5 ஆண்டுகள் வரை நிலத்தில் இருந்து எண்ணெய் எடுக்கலாம். ஈரான் 86.5 வருடங்களும், ஈராக் 100 ஆண்டுகளும், குவைத் 115 ஆண்டுகளும், ஐக்கிய அரபு குடியரசு 91 ஆண்டுகளும், வெனிசுலா 91.3 ஆண்டுகளும், ரஷியா 21.8 ஆண்டுகளும், லிபியா 61.5 ஆண்டுகளும் கஜகஸ்தான் 73.3 ஆண்டுகளும், நைஜீரியா 41.5 ஆண்டுகளும் எண்ணெய் எடுக்க முடியும். ஏற்கனவே இருக்கும் எண்ணெய்க் கிணறுகள் வறண்டு வரும் வேளையில், புதிய எண்ணெய்க் கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டு வருவது ஆறுதலான செய்தி.

Wednesday, April 20, 2016


2½  லட்சம்  தொழில்  அதிபர்கள் உருவாகப் போகிறார்கள் 16/04/2016

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று, டெல்லியில் பிரதமர் தேசியக்கொடியை ஏற்றிவைக்கும்போதும், மாநிலங்களில் முதல்-அமைச் சர்கள் கொடியேற்றி வைக்கும்போதும் உரை ஆற்று வார்கள். அப்போது அவர்கள் ஆற்றும் உரை, மக்களை பெரிதும் ஈர்க்கும்வகையில் இருக்கும். காரணம், அந்த உரைகளில் மக்களுக்கு பலன் அளிக்கும் பல அறிவிப்புகள் இடம்பெற்றிருக்கும். அந்தவகையில், கடந்த ஆண்டு 69-வது சுதந்திரதினத்தன்று பிரதமர் நரேந்திர மோடி ‘தொடங்கிடு இந்தியா, எழுந்து நில் இந்தியா’ என்ற அறிவிப்பை வெளியிட்டார். நாட்டில் உள்ள ஒரு லட்சத்து 25 ஆயிரம் வங்கிக்கிளைகளும் ஒரு தாழ்த்தப்பட்ட அல்லது மலைவாழ் தொழில்முனைவோருக்கும், ஒரு பெண் தொழில் முனைவோருக்கும் புதிதாக தொழில் தொடங்கு வதற்காக கடன் உதவி அளிக்கவேண்டும் என்பதுதான், இந்த அறிவிப்பின் நோக்கமாகும். இந்த அறிவிப்பு எப்போது நிறைவேற்றப்படுமோ? என்று எல்லோரும் எதிர் பார்த்துக்கொண்டிருந்த வேளையில் சரியான தினத்தில் பிரதமர் தொடங்கி வைத்துள்ளார். மத்திய வேளாண்மை மந்திரியாக இருந்த நேரத்தில், பசுமைப்புரட்சி கொண்டு வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவரும், 1971-ம் ஆண்டு நடந்த பாகிஸ்தான் போரின்போது ராணுவ மந்திரியாக இருந்தவரும், தாழ்த்தப்பட்ட மக்களின் பாதுகாவலராக இருந்தவருமான ஜெகஜீவன்ராமின் பிறந்தநாளின்போது, இந்த ‘எழுந்து நில் இந்தியா’ திட்டத்தை பிரதமர் தொடங்கிவைத்தார். இந்த திட்டத் தின்படி, நாடு முழுவதும் உள்ள ஒரு லட்சத்து 25 ஆயிரம் வங்கிக்கிளைகள் ஒவ்வொன்றும் தாழ்த்தப்பட்ட அல்லது மலைவாழ் மக்களில் ஒருவர், ஒரு பெண் தொழில் முனைவோர் ஆகிய 2 பேர்களுக்கு புதிதாக தொழில் தொடங்க எந்தவித ஜாமீனும் இல்லாமல், ஆளுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடிவரை கடன் வழங்கவேண்டும் என்பதுதான், இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதன்மூலம் ஒரே ஆண்டில் 2 லட்சத்து 50 ஆயிரம் புதிய தொழில் முனைவோர் உருவாகப் போகி றார்கள். இவர்கள் அனைவரும் வேலை தேடுபவர்களாக இருந்த நிலைமாறி, இனி வேலை கொடுக்கப் போகிற வர்களாக மாறப் போகிறார்கள் என்று பிரதமர் கூறியது நூற்றுக்கு நூறு சரியாகும்.

நாட்டில் மொத்தம் 5 லட்சத்து 85 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் உள்ளன. இதில், பெண்கள், தாழ்த்தப் பட்டோர் மற்றும் மலைவாழ் மக்களுக்கு சொந்தமான நிறுவனங்களின் எண்ணிக்கை மிகமிக குறைவாக இருக்கிறது. இந்த ‘எழுந்து நில் இந்தியா’ இந்தக்குறையை நிச்சயமாக போக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொழில் நிறுவனங்களில் பெண்களுக்கு சொந்தமான நிறுவனங்கள் எண்ணிக்கை 85 லட்சம் அதாவது 13 சதவீதம் மட்டுமே. விவசாயம் அல்லாத நிறுவனங்களில் தாழ்த்தப்பட்டோர் 9.5 சதவீதமும், மலைவாழ் மக்கள் 4.3 சதவீதமும் மட்டுமே இத்தகைய தொழில்களை நடத்துகிறார்கள். தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள் மற்றும் பெண்களெல்லாம் ஏதாவது வேலைதேடிக் கொண்டுதான் வாழ்க்கை நடத்தவேண்டும் என்ற நிலையில், இந்த அறிவிப்பின் பலனை அவர்கள் அடைய வேண்டு மென்றால், எத்தகைய தொழில்களை அவர்கள் தொடங்கினால் லாபகரமாக இருக்கும் என்பதை அவர்களுக்கு அரசுத்துறைகள் வழிகாட்டவேண்டும். வங்கிகள்  நிதி உதவி தந்தாலும், எத்தகைய தொழில்களை, எந்த இடத்தில் அமைக்கலாம்? என்பதை அவர்களுக்கு தெரியவைத்தால்தான், அவர்களையும் ஒரு முடிவை எடுக்க அழைத்து செல்வதுபோல இருக்கும். 2 லட்சத்து 50 ஆயிரம் தொழில் முனைவோர் உருவாக்கப்படவேண்டும் என்றால், அவர்களுக்கு அந்தப்பாதையைக் காட்டினால் தான் அதை நோக்கி செல்லமுடியும் என்ற வகையில், மத்திய-மாநில அரசாங்கங்களின் தொழில் வழிகாட்டி மையங்கள் செயல்படவேண்டும். பிரதமரின் அறிவிப்பை ஒவ்வொரு வங்கிக்கிளையும் நிறைவேற்றுகிறதா? என்பதைக் கண்காணிக்கவேண்டும். இந்த அறிவிப்புக்கு ஒரு காலக்கெடு நிர்ணயித்து, அதற்குள் நிறைவேற்றி முடிக்கவேண்டும். மேலும், இது ஒரு தொடர் முயற்சியாக இருக்கவேண்டும்.

செல்போன்கள்  உடல் நலத்துக்கு  கேடா? 18/04/2016

தகவல் தொழில்நுட்ப புரட்சியில் மிகமுக்கியமான ஒரு இடத்தில் இருப்பது செல்போன்கள்தான். எந்த ஒரு வித்தியாசமும் இல்லாமல், எல்லோருடைய கைகளிலும் இருக்கும் ஒரு அத்தியாவசிய சாதனமாக மாறிவிட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஆடம்பர சாதனமாக இருந்த செல்போன், இப்போது இது இல்லாமல் வாழ்க்கை சக்கரமே சுழலாது என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. நாட்டின் மக்கள் தொகைக்கு ஈடாக செல்போன்களின் எண்ணிக்கை வந்துவிடும் என்ற நிலையை எட்டும் வகையில், தற்போது செல்போன்களின் எண்ணிக்கை 100 கோடியை எட்டி வேகமாக சென்றுகொண்டிருக்கிறது. கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 70 லட்சம் புதிய செல்போன் இணைப்புகள் கூடுதலாக சேர்ந்துள்ளன. அரசு, வங்கி அனைத்து சேவைகளுக்கும் தகவல் அனுப்புவதற்கு இப்போது செல்போன்கள்தான் வழியாக இருக்கிறது. வெறுமனே பேசுவதற்கும், எஸ்.எம்.எஸ். அனுப்புவதற்கு  மட்டுமே  என்ற  நிலையைத்தாண்டி,  பொழுதுபோக்குக்காக சினிமா பார்ப்பதில் தொடங்கி அனைத்து தகவல்களையும் இணையதளம் மூலம் பெறுவதற்கு வசதியான இன்டர்நெட் சேவையைப்பெறுவதற்கும் இப்போது செல்போன்களை பயன்படுத்துவோரின்  எண்ணிக்கை  உயர்ந்து கொண்டே போகிறது.

இது ஒருபுறம் இருக்க, செல்போன்  டவர்களாலும்,  அதிகமாக செல்போன்களை பயன்படுத்துவதாலும், உடல்நலத்துக்கு கேடு ஏற்படுகிறது, இவை இரண்டிலும் இருந்து வெளியாகும் மின்காந்த அலைகளால் புற்றுநோய் வருகிறது என்றும் அச்சமூட்டும் தகவல்கள் வருவதும் பயமாக இருக்கிறது. “செல்போன் டவர்களில் இருந்து வரும் மின்காந்த கதிர்வீச்சு அலைகள் மனிதனின் உடல்நலத்துக்கு மட்டுமல்ல, விலங்குகள், பறவைகளுக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. செல்போன் டவர்கள் இருக்கும் இடங்களைச்சுற்றிலும் உள்ள பகுதிகளில் சிட்டுக்குருவிகளைப்பார்க்க முடிகிறதா?” என்ற கேள்விகளைக் கேட்டு, இதுதான் ஆதாரம் என்று கூறுபவர்களும் உண்டு. கேரள மாநில ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்து புற்றுநோயால் காலமான ஜெ.எல்.குப்தா எழுதியுள்ள நூலில், ‘நான் செல்போனை அதிக நேரம் பயன்படுத்தியதால் குறிப்பாக உச்ச நீதிமன்ற வக்கீலாக இருந்தபோது, கட்சிக்காரர்களிடம் நீண்டநேரம் செல்போனில் கலந்துரையாடல் செய்ததால்தான் என்னுடைய மூளையில் புற்றுநோய் கட்டி வந்தது’ என்று எழுதியிருப்பது பல அச்சம் கலந்த உணர்வுகளை கிளப்பிவிட்டுவிட்டது. சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர், நீதிபதிகள் ஆர்.பானுமதி, யூ.யூ.லலித் ஆகியோர் கொண்ட பெஞ்சு, டெல்லி வசந்த்குஞ்ச் பகுதி குடியிருப்போர் தங்கள் பகுதியில் செல்போன் டவர்கள் அமைப்பதற்கு தடைவிதிக்கவேண்டும் என்று கோரி தொடர்ந்த வழக்கில், மறைந்த கேரள ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எழுதிய நூலில் குறிப்பிட்ட தகவல்களை எடுத்துக்காட்டி, “இதை அறிவியல் ரீதியாக நிரூபிக்க ஏதாவது ஆதாரம் இருக்கிறதா?” என்று கேட்டு இருக்கிறார்கள். இது மட்டுமல்லாமல், “செல்போன் டவர்களில் இருந்து வெளிவரும் மின்காந்த அலைகளால் உடல்நலத்துக்கு கேடு ஏற்படுகிறதா?, இந்த டவர்களை சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மாசு ஏற்படுத்துபவை என்று வகைப்படுத்தலாமா?” என்று நீதிபதிகள் கேட்டு இருக்கிறார்கள்.

செல்போன்கள் வாழ்க்கையின் அங்கமாகிவிட்டது. சில ஆய்வுகள்  செல்போன்களில்  இருந்தும்  மின்காந்த  கதிர் வீச்சுகள் வெளிவருகின்றன என்று  கூறுகிறது.  இதற்கு  தீர்வுதான் என்ன?. வெளிநாடுகளில் என்ன தரம் பின்பற்றப்படுகிறது? என்று கேட்டு இருக்கிறார்கள். இது வெகு நாட்களாகவே மக்கள் மனதில் உள்ள ஒரு அச்சம் கலந்த குழப்பம். உடனடியாக மத்திய அரசாங்கம், விஞ்ஞானிகளின் துணையோடு செல்போன் டவர்களில் இருந்தும், செல்போன்களில் இருந்தும் மின்காந்த கதிர்வீச்சுகள் வெளிவருகின்றதா?, பாதுகாப்பு எச்சரிக்கை நடவடிக்கையாக என்னென்ன எடுக்கலாம்? என்பதுபோன்ற ஆய்வுகளை நடத்தி, ஒரு தெளிவான அறிவிப்புகளை மக்களுக்கு தெரிவிக்கவேண்டும். செல்போன் டவர்கள், செல்போன்களால் ஆபத்து என்பது வீண் பயமா?, ஆதாரம் இருக்கிறதா? என்ற தகவல் மக்களுக்கு தெரிந்தாகவேண்டும்.

மக்கள்  அவதிகளை  உயர்  அதிகாரிகள்  உணரவேண்டும்!  19/04/2016

இந்தியாவை போன்றே அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டை போன்றே பல அரிய சிந்தனைகளை வழங்கும் அறிஞர் பெருமக்கள் வாழ்ந்த பூமி சீனாவும் ஆகும். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தாவோயிசம் என்ற அரிய, அதேநேரத்தில் புதியசிந்தனைகளின் தொகுப்புகளை வழங்கியவர், லாவோ சூ என்ற சிந்தனையாளர். அவர் அன்று கூறிய ஒரு சிந்தனை தொகுப்பு, ஆபிரகாம்லிங்கனாலும், அதேபோல மறைந்த பேரறிஞர் அண்ணாவாலும் அடிக்கடி குறிப்பிட்டு காட்டப்பட்டது. ‘‘மக்களிடம் செல். அவர்களுடன் வாழ். அவர்களிடம் கற்றுக்கொள். அவர்களை நேசி. அவர்களுக்கு தெரிந்ததிலிருந்து தொடங்கு. அவர்களிடமிருப்பதில் இருந்து கட்டமை. மிகச்சிறந்த தலைவர்கள் பணி முற்றுப்பெற்றதும் மக்களை ‘நாங்களாகவே தாம் இதைச்செய்து முடித்தோம்’ என்று சொல்லவைப்பார்கள்’’ என்பதுதான் அந்த அரிய சிந்தனைக் கருத்தாகும். ஆக, எந்த ஒரு பிரச்சினை என்றாலும், மக்களோடு வாழும்போதுதான் அவர்களிடம் இருந்து அதை கற்றுக்கொள்ளமுடியும். இந்த அரிய கருத்தை சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் கொண்ட பெஞ்ச், அதிகாரிகளுக்கு கற்றுக்கொடுத்துள்ளது.

கச்சா எண்ணெய் விலை சர்வதேச அளவில் கடந்த சில மாதங்களாக பெரும்அளவில் சரிந்து கொண்டிருக்கிறது. ஆனால், இந்த விலை குறையும்போது, அதற்கு ஏற்றவிலையில் இல்லாவிட்டாலும், பெட்ரோல், டீசல் விலையும் ஓரளவு குறைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், குறைந்துவரும் பெட்ரோல், டீசல் விலைக்கேற்ப, ஆட்டோ ரிக்ஷா கட்டணத்தை நிர்ணயம் செய்யவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்தவழக்கை விசாரித்த நீதிபதிகள், சரமாரியாக அரசு சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரலிடம் சில கேள்விகளை கேட்டார்கள். “நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை ஆட்டோ டிரைவர்கள் வசூலிப்பதில்லை. அவர்கள் இஷ்டம்போல் கட்டணத்தை வசூலிக்கின்றனர். நடவடிக்கை எடுக்கவேண்டிய அதிகாரிகள் பலர், ஆட்டோக்களின்  உரிமையாளர்களாக உள்ளனர். அதனால் நடவடிக்கை எடுப்பதில்லை. ஆட்டோ டிரைவர்களுக்கும், அதிகாரிகளை கண்டுபயமில்லை. இதனால் ஆட்டோவில் பயணம்செய்யும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். பொதுமக்கள் படும் அவதிகளை புரிந்துகொள்ளவேண்டும் என்றால், தமிழக போக்குவரத்துத்துறை கமிஷனர், எழிலகத்தில் உட்காராமல், ஆட்டோவில் பயணம்  செய்ய சொல்லுங்கள்” என்று கடுமையாக கருத்துக்களை தெரிவித்தனர்.

அதேநேரம் நீதிபதிகளின் இந்த கருத்து, பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. “நாங்கள் படும் வேதனைகளை அதிகாரிகள் தங்களை யார்? என்று சொல்லாமல், ஆட்டோவில் பயணம் செய்யும்போதுதானே தெரியும்?” என்று நினைக்கின்றனர். இது போக்குவரத்துத்துறை அதிகாரிகள் மட்டுமல்லாமல், எல்லா அரசு அதிகாரிகளும் பின்பற்றவேண்டிய கருத்தாகும். பொதுவாக திட்டங்களை அரசு அறிவிக்கிறது. அதை செயல்படுத்துவதற்கான உத்தரவுகளை உயர் அதிகாரிகள் பிறப்பிக்கின்றனர். இந்த உயர் அதிகாரிகள் அதோடு தங்களது கடமை முடிந்துவிட்டது என்று நினைப்பதால்தான், பல திட்டங்கள் என்ன நோக்கத்துக்காக தீட்டப்படுகிறதோ, அந்த நோக்கம் களப்பணியாளர்களால் உரியமுறையில் நிறைவேற்றப்படுவதில்லை

ஏற்கனவே ரெயில்வே மந்திரி சுரேஷ்பிரபு, “உயர் அதிகாரிகள் எல்லாம் இரண்டாம் வகுப்பு ரெயில் பெட்டியில் பயணம்செய்து, மக்களின் பிரச்சினைகளை தங்களது அனுபவம் மூலம் அறிந்துகொள்ளவேண்டும்” என்று கூறியுள்ளார். இப்போது, உயர்நீதிமன்றம் வகுத்துக்கொடுத்த விதிகளின்படி, தலைமை பொறுப்பில் உள்ள அதிகாரிகள் தங்களது அலுவலக அறையில் இருந்து உத்தரவு பிறப்பிப்பதோடு நின்றுவிடாமல், கடைக்கோடி குக்கிராமங்கள் வரை அந்த உத்தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது? என்பதை மக்களோடு மக்களாக நின்று பார்த்தால்தான், நிறை, குறைகளை பார்க்கமுடியும். நிறை இருந்தால், களப்பணியாளர்களை பாராட்டமுடியும். குறை இருந்தால் கண்டிக்க முடியும். இதே உத்தரவை தேர்ந்தெடுக்கப்பட இருக்கும் புதிய சட்டமன்ற உறுப்பினர்களும், தாரக மந்திரமாகக்கொண்டு மக்களோடு கலந்து, மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்கவேண்டும்.

ஆன்லைனில்  விவசாய  விளைபொருட்கள்  விற்பனை 20/04/2016

சில ஆண்டுகள் முன்புவரை வரப்புகளையும், வாய்க்கால்களையும் கொண்டு நெல், கரும்பு, வாழை என்று பணப்பயிர்களையும், மானாவாரி நிலங்களில் அதாவது மழையை நம்பி விவசாயம் செய்த இடங்களில் தானியவகைகள் என்று பயிரிட்ட விளைநிலங்கள் எல்லாம் இன்று சர்வே கல் மயமாக பொட்டல்காடாகக் காட்சியளிப்பதை எல்லா ஊர்களிலும் பார்க்கமுடிகிறது. பரம்பரை பரம்பரையாக இது எங்கள் சொந்தபூமி என்று பெருமையோடு விவசாயம் செய்துவந்த வேளாண்பெருமக்களெல்லாம், இன்று தங்கள் நிலத்தை விற்றுவிட்டு, வேறுவேலைக்கோ அல்லது வேறுவேலை தெரியாத நிலையில் தங்களுக்குத் தெரிந்த ஒரே வேலையான விவசாயத்தைப் பார்க்கும் விவசாய கூலிகளாகவோ மாறியுள்ள சோகமான நிலை நிலவிக் கொண்டு இருப்பதை யாராலும் மறுத்துவிட முடியாது. இதற்கு முக்கியக்காரணம், விவசாயம் லாபகரமானதாக இல்லை, போட்டபணம் கிடைக்காமல் கையைப்பிடித்து தொடர்ந்து கடிக்கிறது.

நெருப்பு தணல் கொண்ட குச்சியை யாரால் கையில் பிடித்துக்கொண்டு இருக்கமுடியும்?. கையைச்சுடும்போது கீழே போடவேண்டிய நிலைதானே ஏற்படும்?. அதேபோலத்தான், ஆண்டுதோறும் நஷ்டம் ஏற்பட்டுக்கொண்டே இருந்தால் எப்படி விவசாயத்தை தொடர்ந்து மேற்கொள்ளமுடியும் என்று விவசாயிகள் கேட்பதிலும் நியாயம் இருக்கிறது. அப்படி தொடர்ந்து நஷ்டம் ஏற்படுவதற்கு காரணம் என்ன என்று பார்த்தால், மழை பொய்த்துப்போவது என்பது ஒரு காரணமாக இருந்தாலும், விதை, உரம், பூச்சிமருந்து, விவசாய பணிகளுக்கான சம்பளம் போன்ற பல செலவுகள் உயர்ந்துகொண்டிருக்கும் நிலையில், அதற்கு ஈடுகட்டும் வகையில் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் இருப்பதுதான் முக்கிய காரணம். எல்லா பொருட்களுக்கும் உற்பத்தி செய்பவர்களே விலையை நிர்ணயிக்கும்போது, விவசாயிகள் மட்டும் தான் விளைவிக்கும் பொருட்களுக்கு அவர்களே விலையை நிர்ணயிக்க முடியவில்லை. இடைத்தரகர்களும், அந்த விளைபொருட்களை வாங்குபவர்களும் என்னவிலையை சொல்கிறார்களோ, அந்த விலைக்குத்தான் விற்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். அதிலும் அழுகும்பொருட்களாக இருந்தால் வேறுவழியே இருக்காது. சிலநேரங்களில் விளைநிலங்களில் இருந்து வண்டியைக் கட்டிக்கொண்டோ, வேன், லாரியிலோ, மண்டி அல்லது சந்தை அல்லது மொத்தவியாபாரிகளிடம் எடுத்துக்கொண்டு செல்லும் நிலையில் அவர்கள் கேட்கும் விலைக்குத்தான் கண்டிப்பாக விற்கவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் இருந்து விவசாயிகளைக் காப்பாற்றி, கட்டுப்படியான விலைகிடைக்க வேளாண் விளைபொருட்களை ஆன்லைன் மூலம் விற்கும் புதியமுறையை அறிமுகப்படுத்தியதன் மூலம், விவசாய புரட்சிக்கு பிரதமர் நரேந்திரமோடி வித்திட்டுள்ளார். இதற்காக தேசிய வேளாண் சந்தை இணையதளம் அதாவது ‘ஈ-நம்’ என்ற பெயரில் ஒரு இணையதளத்தை தொடங்கியுள்ளார். இந்த இணையதளம் மூலம் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை எந்த விலைக்கு?, எங்கு?, எப்போது? விற்கலாம் என்பதை அறிந்துகொள்ளலாம். எப்படி என்றால், மொத்தவிற்பனை மண்டிகளுக்கும், விவசாயிகளுக்கும் இணையதளம் மூலம் நேரடிதொடர்பு ஏற்பட்டுவிடும். தங்களுக்குத் தேவையான விளைபொருட்களை வாங்க மண்டியில் உள்ள வியாபாரிகளும், விவசாயிகளோடு நேரடி தொடர்புகொள்ளலாம். இதன்மூலம் இடைத்தரகர்களுக்கு வேலை இருக்காது. யார் தனக்கு கட்டுப்படியான விலையைக் கொடுக்கத்தயாராக இருக்கிறார்களோ, அவர்களுக்கே விவசாயியால் தான் விளைவித்த பொருட்களை விற்பனை செய்யமுடியும்.

அப்படி ஆன்லைன் மூலம் விவசாயிகள் விற்பனை செய்யவேண்டுமென்றால், வேளாண் விளைபொருள் விற்பனை குழு சட்டத்தில் திருத்தம் கொண்டுவரவேண்டும். அந்த வகையில், தற்போது 14 மாநிலங்களில்தான் இப்படி ஆன்லைன் வர்த்தகத்தை மேற்கொள்ள முடியும். தமிழ்நாட்டிலும் இந்த முறையை செயல்படுத்த வேண்டுமானால், சில சட்டத்திருத்தங்கள் கொண்டுவரப்படவேண்டும். எனவே, தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் அரசு, விவசாயிகள் மற்றும் விவசாய விளைபொருட்களை வாங்குபவர்களுடன் கலந்து பேசி சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும். இவ்வாறு ஆன்லைன் முறையை மிகச்சிறிய குறு விவசாயிகளும் பயன்படுத்த தமிழ்நாட்டில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்ஆளுமை சேவை மையங்கள் நிச்சயமாக உதவியாக இருக்கும்

திமிங்கலம், மீன் அல்ல.21/04/2016

திமிங்கலம் மீன் இனத்தைச் சேர்ந்ததல்ல. அது குட்டி போட்டு பால் கொடுக்கும் விலங்குகள் இனத்தை சேர்ந்தது. உலகில் உள்ள விலங்குகளில் மிகப் பெரியது, நீரில் வாழும் திமிங்கலம் ஆகும். திமிங்கலத்தில் நீலத் திமிங்கலம் என்பது தான் மிகப் பெரியது.

இதன் நீளம் 36 மீட்டருக்கு மேல் இருக்கும். எடை 162 டன்னுக்கு மேல். இது சுமார் 40 யானைகளின் எடைக்கு சமம் ஆகும். இதன் எலும்புகள் மட்டும் 91 டன்னுக்கு மேல் தேறும். திமிங்கலம் 40 வருடங்கள் வரை உயிர் வாழும். இதன் உடலில் 20 பீப்பாய் எண்ணெயும், 100 பீப்பாய் கொழுப்பும் இருக்கிறது. இதன் தலையில் மட்டும் ஒரு டன் எண்ணெய் கிடைக்கும். திமிங்கலத்தின் எண்ணெய்யை கொண்டு ‘அம்பர்‘ என்ற வாசனைத் திரவியம், சோப்பு, மெழுகுவர்த்தி போன்ற பொருட்களைத் தயாரிக்கலாம்.  திமிங்கலத்தின் உணவு, மீன்கள், கீல், கடல் நாய்கள் தான். இதன் வாயின் நீளம் 18 அடி. வாயைத் திறந்து கொண்டு நீருடன் சேர்த்து இரையை விழுங்கும். ஒரு நாளைக்கு 1,000 கிலோ உணவை உண்கிறது. ஒரு தடவைக்கு ஒரு குட்டி போடும். கருக்காலம் ஒரு வருடம்.

பிறந்த குட்டி கூட ஒரு பெரிய யானையின் உருவத்தைவிட பெரிதாகவும், அதிக எடையுடனும் இருக்கும். பிறக்கும் போதே 7.5 மீட்டர் நீளம் இருக்கும். குட்டி, தாயிடம் பால் குடித்து வளரும். ஒரு தடவைக்கு 46 லிட்டர் பாலை ஒரே மூச்சில் உறிஞ்சிவிடும்.3 மாதங்கள் வரை தாய்ப்பால் குடிக்கும். 9 மீட்டர் நீளம் வளர்ந்தவுடன் தாயை விட்டு பிரியும். ஒரு திமிங்கலம் அதன் வாழ்நாளில் அதிக பட்சமாக 4 குட்டிகள் வரை ஈனும். இதுவும் பாலூட்டி இனங்கள் போன்றே நுரையீரல் மூலம் சுவாசிக்கிறது. மூக்குத் துவாரம் தலையின் மேல் பகுதியில் இருக்கிறது. மூச்சை வெளியிடும் போது காற்றிலுள்ள நீராவி குளிர்ந்து நீரூற்று போல் பீய்ச்சியடிக்கும். இது நெடுந்தொலைவுக்கு தெரியும். திமிங்கலம் பிராண வாயுவை கிரகித்து கரியமில வாயுவை வெளியிடுகிறது. நீர் மட்டத்திற்கு மேல் வந்து காற்றை இழுத்துக்கொண்டு நீருக்கடியில் சென்றால் 45 நிமிடங்கள் கழித்தே மீண்டும் காற்றுக்காக மேலே வரும்.  ஒரு முறைக்கு சுமார் 12 கிலோ காற்றை இழுத்துக்கொள்ளும். நீருக்கடியில் 162 மீட்டர் ஆழம் வரை நீந்திச் செல்லும். மணிக்கு 45 கிலோ மீட்டர் வேகத்தில் நீந்திச் செல்லும். நீந்துவதற்கு 600 குதிரை சக்தியை செலவிடுகிறது. இவ்வளவு பெரிய உருவத்தின் கண், ஒரு குதிரையின் கண் அளவே உள்ளது. ஆனாலும் இதன் பார்வை மிகக் கூர்மையாகவும், துல்லியமாகவும் இருக்கும்.

கண்களுக்கு அருகே செவித் துளைகள் இருக்கின்றன. ஒரு ஈர்க்குச்சி நுழையும் அளவே இதன் செவித்துளைகள் உள்ளன. திமிங்கலங்கள் பல வகை உண்டு. நீலத் திமிங்கலம், ஸ்பெர்ம் திமிங்கலம், கொலைத் திமிங்கலம், சிலம்புத் திமிங்கலம், வர்க்க திமிங்கலம், பலின் திமிங்கலம் ஆகியவை அவற்றில் சிலவாகும்.
21/04/2016

தேன்கூட்டில்  கையை  வைத்தால்! 21/04/2016

தேன்கூட்டில் கையை வைத்தால் அங்குள்ள தேனீக்கள் எல்லாம் மொத்தமாக ஒன்றுசேர்ந்து உடல்முழுவதும் கொட்டி, வேதனையால் துடிதுடிக்க வைத்துவிடும். அதுபோன்ற ஒரு நிலையைத்தான் மத்திய அரசாங்கம் இந்த ஆண்டு பட்ஜெட்டிலிருந்து தொடர்ந்து அனுபவித்துவருகிறது. தொழிலாளர்கள் பணிபுரியும் காலத்தில் தொழிலாளர் வருங்கால வைப்புநிதியில் தங்கள் சேமிப்பை முதலீடு செய்கிறார்கள். அரசாங்க வேலையில் இருப்பவர்களுக்கு வேலையில் இருந்து ஓய்வுபெற்றபின் மாதாந்திர பென்ஷன் கிடைக்கும். ஆனால், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மாதாந்திர பென்ஷன் கிடையாது. மாதந்தோறும் அவர்களுடைய சம்பளத்திலிருந்து அதிக பட்சமாக 12 சதவீதம் பிடிக்கப்படும். இதுபோல, அவர்களை வேலையில் அமர்த்தியிருக்கும் நிறுவனமும், தங்கள் கையிலிருந்து 12 சதவீதம் வழங்கும். இந்த 24 சதவீத தொகையும் தொழிலாளர் வைப்புநிதியில் சேர்க்கப்பட்டு, அதற்கு வட்டியும் வழங்கப்படுகிறது.<p></p>இந்த மொத்ததொகையை பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின்பு ஊழியர்கள் மொத்தமாக வாங்கிக்கொள்ளலாம், அதற்கு வரிகிடையாது என்று இருந்தது. இடையில் அவசர தேவைக்கும் ஒரு குறிப்பிட்ட சதவீத தொகையை வாங்கிக் கொள்ளலாம். இவ்வாறு தனியார் நிறுவனங்களில் பணி புரியும் 3 கோடியே 70 லட்சம் பேர் இந்த வைப்புநிதியில் உறுப்பினர்களாக இருந்தார்கள். பட்ஜெட் தாக்கல் செய்ததிலிருந்தே தொழிலாளர்களை பாதிக்கும் வகையில், வைப்புநிதியில் பல மாற்றங்களை மத்திய அரசாங்கம் கொண்டுவந்தது. ஒவ்வொரு அறிவிப்புக்கும் எதிர்ப்புகள் வந்தவுடன் உடனடியாக அதை வாபஸ் பெற்றுக்கொண்டிருந்தது.

இடையிலே வேலையைவிட்டு நின்றாலோ, அல்லது அவசரதேவைக்கோ இந்த தொகையை பெற்றுக்கொள்ளலாம் என்று ஏற்கனவே இருந்தது. ஆனால், இப்போது மத்திய அரசாங்கம் இந்த வருங்கால வைப்புநிதி திட்டத்தில் ஓய்வுபெறும் வயதை 54-லிருந்து 58 ஆக உயர்த்தியது மட்டுமல்லாமல், இடையில் வேலையைவிட்டு நின்றாலோ, அல்லது அவசரதேவைக்கோ பணம் எடுப்பவர்கள் முழுத்தொகையையும் 58 வயதுக்கு முன்பு எடுக்கமுடியாது. இடையில் அப்படியே எடுக்கவேண்டுமென்றால், அவர்கள் கட்டிய தொகையைத்தான் எடுக்கமுடியுமே தவிர, வேலைக்கு அமர்த்தியவர்கள் வழங்கியதொகையை எடுக்கமுடியாது என்று கட்டுப்பாடு விதித்தது. இதை எதிர்த்து பெங்களூருவில் உள்ள ஆடை தயாரிப்பு தொழிலாளர்கள் ஏறத்தாழ ஒரு லட்சம் ஆண்களும், பெண்களும் பெங்களூரு நகரமே ஸ்தம்பிக்கும் வகையில் கடுமையான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாரின் கண்ணீர் புகைகுண்டுவீச்சு, வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு, தடியடி என்று பெரிய அமளியே ஏற்பட்டுவிட்டது. 100-க்கும் மேற்பட்ட பஸ்கள் சேதப்படுத்தப்பட்டன. சில வாகனங்கள் தீயிட்டும் கொளுத்தப்பட்டன. 100-க்கும் மேற்பட்டவர்கள் காயமும் அடைந்தனர். எங்கே இந்த போராட்டம் காட்டுத்தீபோல பரவி, நாடு முழுவதும் தொழிலாளர்களின் எதிர்ப்பு அலைகிளம்பிவிடுமோ? என்ற நிலையில் மத்திய அரசாங்கம் அப்படியே தனது முடிவை பின்வாங்கிக்கொண்டது.

வீடு கட்டுவது, மருத்துவசெலவு, குழந்தைகளின் தொழில்கல்வி செலவு, திருமணச்செலவு போன்ற செலவுகளுக்கு, பதவியிலிருந்து ஓய்வுபெறும் முன்பே முழுத்தொகையையும் பெற்றுக்கொள்ளலாம் என்ற வகையில் மத்திய அரசாங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நாங்கள் ஏற்கனவே எடுத்தமுடிவுகள் எல்லாம் வயதுமுதிர்ந்த காலத்தில் தொழிலாளர்களுக்கு சமூகபாதுகாப்புவேண்டும் என்பதற்காகத்தான் என்று காரணம் சொல்கிறார்கள். எந்த ஒரு தொழிலாளியும் தன் மாதசம்பளத்திலிருந்து சேமிக்கும் பணத்தையும், தன்னை வேலைக்கு அமர்த்தும் தொழில்நிறுவனங்கள் தனக்காக வழங்கும் தொகையையும் எப்போது எடுக்கவேண்டும்?, எப்படி செலவழிக்கவேண்டும்? என்று முடிவெடுப்பது அவரவர் சொந்த உரிமை. அதில் மத்திய அரசாங்கம் தலையிடக்கூடாது. சமூகபாதுகாப்பு அளிக்கவேண்டும் என்றால், அரசு சார்பில் எவ்வளவோ திட்டங்களை தீட்டலாம். இனிமேலும் இதுபோன்ற முடிவுகளை அறிவிக்கும் முன்பு, சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துபேசி முடிவை அறிவிக்கவேண்டுமே தவிர, இப்படி முடிவுகளை அரசாங்கம் தன்னிச்சையாக எடுத்துவிட்டு, உடனுக்குடன் வாபஸ்பெறும் நிலை ஏற்படக்கூடாது.