மக்கள் அவதிகளை உயர் அதிகாரிகள் உணரவேண்டும்! 19/04/2016
இந்தியாவை போன்றே அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டை போன்றே பல அரிய சிந்தனைகளை வழங்கும் அறிஞர் பெருமக்கள் வாழ்ந்த பூமி சீனாவும் ஆகும். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தாவோயிசம் என்ற அரிய, அதேநேரத்தில் புதியசிந்தனைகளின் தொகுப்புகளை வழங்கியவர், லாவோ சூ என்ற சிந்தனையாளர். அவர் அன்று கூறிய ஒரு சிந்தனை தொகுப்பு, ஆபிரகாம்லிங்கனாலும், அதேபோல மறைந்த பேரறிஞர் அண்ணாவாலும் அடிக்கடி குறிப்பிட்டு காட்டப்பட்டது. ‘‘மக்களிடம் செல். அவர்களுடன் வாழ். அவர்களிடம் கற்றுக்கொள். அவர்களை நேசி. அவர்களுக்கு தெரிந்ததிலிருந்து தொடங்கு. அவர்களிடமிருப்பதில் இருந்து கட்டமை. மிகச்சிறந்த தலைவர்கள் பணி முற்றுப்பெற்றதும் மக்களை ‘நாங்களாகவே தாம் இதைச்செய்து முடித்தோம்’ என்று சொல்லவைப்பார்கள்’’ என்பதுதான் அந்த அரிய சிந்தனைக் கருத்தாகும். ஆக, எந்த ஒரு பிரச்சினை என்றாலும், மக்களோடு வாழும்போதுதான் அவர்களிடம் இருந்து அதை கற்றுக்கொள்ளமுடியும். இந்த அரிய கருத்தை சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் கொண்ட பெஞ்ச், அதிகாரிகளுக்கு கற்றுக்கொடுத்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை சர்வதேச அளவில் கடந்த சில மாதங்களாக பெரும்அளவில் சரிந்து கொண்டிருக்கிறது. ஆனால், இந்த விலை குறையும்போது, அதற்கு ஏற்றவிலையில் இல்லாவிட்டாலும், பெட்ரோல், டீசல் விலையும் ஓரளவு குறைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், குறைந்துவரும் பெட்ரோல், டீசல் விலைக்கேற்ப, ஆட்டோ ரிக்ஷா கட்டணத்தை நிர்ணயம் செய்யவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்தவழக்கை விசாரித்த நீதிபதிகள், சரமாரியாக அரசு சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரலிடம் சில கேள்விகளை கேட்டார்கள். “நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை ஆட்டோ டிரைவர்கள் வசூலிப்பதில்லை. அவர்கள் இஷ்டம்போல் கட்டணத்தை வசூலிக்கின்றனர். நடவடிக்கை எடுக்கவேண்டிய அதிகாரிகள் பலர், ஆட்டோக்களின் உரிமையாளர்களாக உள்ளனர். அதனால் நடவடிக்கை எடுப்பதில்லை. ஆட்டோ டிரைவர்களுக்கும், அதிகாரிகளை கண்டுபயமில்லை. இதனால் ஆட்டோவில் பயணம்செய்யும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். பொதுமக்கள் படும் அவதிகளை புரிந்துகொள்ளவேண்டும் என்றால், தமிழக போக்குவரத்துத்துறை கமிஷனர், எழிலகத்தில் உட்காராமல், ஆட்டோவில் பயணம் செய்ய சொல்லுங்கள்” என்று கடுமையாக கருத்துக்களை தெரிவித்தனர்.
அதேநேரம் நீதிபதிகளின் இந்த கருத்து, பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. “நாங்கள் படும் வேதனைகளை அதிகாரிகள் தங்களை யார்? என்று சொல்லாமல், ஆட்டோவில் பயணம் செய்யும்போதுதானே தெரியும்?” என்று நினைக்கின்றனர். இது போக்குவரத்துத்துறை அதிகாரிகள் மட்டுமல்லாமல், எல்லா அரசு அதிகாரிகளும் பின்பற்றவேண்டிய கருத்தாகும். பொதுவாக திட்டங்களை அரசு அறிவிக்கிறது. அதை செயல்படுத்துவதற்கான உத்தரவுகளை உயர் அதிகாரிகள் பிறப்பிக்கின்றனர். இந்த உயர் அதிகாரிகள் அதோடு தங்களது கடமை முடிந்துவிட்டது என்று நினைப்பதால்தான், பல திட்டங்கள் என்ன நோக்கத்துக்காக தீட்டப்படுகிறதோ, அந்த நோக்கம் களப்பணியாளர்களால் உரியமுறையில் நிறைவேற்றப்படுவதில்லை
ஏற்கனவே ரெயில்வே மந்திரி சுரேஷ்பிரபு, “உயர் அதிகாரிகள் எல்லாம் இரண்டாம் வகுப்பு ரெயில் பெட்டியில் பயணம்செய்து, மக்களின் பிரச்சினைகளை தங்களது அனுபவம் மூலம் அறிந்துகொள்ளவேண்டும்” என்று கூறியுள்ளார். இப்போது, உயர்நீதிமன்றம் வகுத்துக்கொடுத்த விதிகளின்படி, தலைமை பொறுப்பில் உள்ள அதிகாரிகள் தங்களது அலுவலக அறையில் இருந்து உத்தரவு பிறப்பிப்பதோடு நின்றுவிடாமல், கடைக்கோடி குக்கிராமங்கள் வரை அந்த உத்தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது? என்பதை மக்களோடு மக்களாக நின்று பார்த்தால்தான், நிறை, குறைகளை பார்க்கமுடியும். நிறை இருந்தால், களப்பணியாளர்களை பாராட்டமுடியும். குறை இருந்தால் கண்டிக்க முடியும். இதே உத்தரவை தேர்ந்தெடுக்கப்பட இருக்கும் புதிய சட்டமன்ற உறுப்பினர்களும், தாரக மந்திரமாகக்கொண்டு மக்களோடு கலந்து, மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்கவேண்டும்.
No comments:
Post a Comment