வறண்டு போகும் பெட்ரோல் கிணறுகள் 15/04/2016
பெட்ரோல் இன்னும் எத்தனை நாட்களுக்கு? இதுதான் உலகம் நடுங்கியபடி தன்னைத்தானே கேட்டுக்கொள்ளும் கேள்வி. அதிகரித்து வரும் பயன்பாட்டுக்கு இடையே இந்த கேள்வி மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
உலகம் முழுவதும் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட எண்ணெய் வளத்தையும், அதன் சராசரி உற்பத்தியையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது இன்னும் 40 வருடங்களுக்கு தான் எண்ணெய் கிடைக்கும் என்று ஒரு கணக்கீடு சொல்கிறது.
உலகம் முழுவதும் சுமார் 1.24 லட்சம் கோடி பீப்பாய் எண்ணெய் இருப்பு உள்ளது. இதில் சவுதி அரேபியா 21.3 சதவீதமும், ஈரான் 11.2 சதவீதமும் இருப்பு வைத்துள்ளன. பெட்ரோல் உற்பத்தியில் சவுதி அரேபியாவே முன்னிலையில் உள்ளது. ஒரு காலத்தில் ரஷியாவே அதிகமாக எண்ணெய் உற்பத்தி செய்து கொண்டிருந்தது. ஆனாலும், ஏற்றுமதியில் சவுதியே முன்னிலையில் இருந்தது. ரஷியாவில் எடுக்கப்படும் எண்ணெய்யில் பாதிக்கு மேல் அந்த நாட்டிலே செலவாகிவிடுகிறது.
ஒவ்வொரு நாளும் உலகம் முழுவதும் உற்பத்தியாகும் மொத்த பெட்ரோலில் 25 சதவீதம் அமெரிக்காவே பயன்படுத்துகிறது. அதற்கடுத்து சீனா 9.3 சதவீதம் பயன்படுத்துகிறது. ஜப்பான் 5.8, இந்தியா 3.3, ரஷியா 3.2, கனடா 2.6, சவுதி அரேபியா 2.5, பிரேசில் 2.4 சதவீதம் என்ற கணக்கில் பெட்ரோலை பயன்படுத்துகின்றன. உற்பத்தியில் முதன்மையாக உள்ள சவுதி அரேபியாவில் தினமும் 12.8 சதவீதம் உற்பத்தி செய்யப்படுகிறது. ரஷியா 12.6 சதவீதம், அமெரிக்கா 8.1 சதவீதம், ஈரான் 5.4, சீனா 4.8, மெக்ஸிகோ 4.4, கனடா 4.1, வெனிசுலா 3.4, குவைத் 3.3 சதவீதம் என்ற அளவில் தினமும் எண்ணெய் உற்பத்தியாகிறது.
எண்ணெய் இருப்பு உள்ள நாடுகளில், எத்தனை ஆண்டுகள் எண்ணெய் வளம் இருக்கும் என்பதை நிபுணர்கள் ஆய்வு செய்து கூறியுள்ளனர். அதன்படி சவுதி அரேபியாவில் 69.5 ஆண்டுகள் வரை நிலத்தில் இருந்து எண்ணெய் எடுக்கலாம். ஈரான் 86.5 வருடங்களும், ஈராக் 100 ஆண்டுகளும், குவைத் 115 ஆண்டுகளும், ஐக்கிய அரபு குடியரசு 91 ஆண்டுகளும், வெனிசுலா 91.3 ஆண்டுகளும், ரஷியா 21.8 ஆண்டுகளும், லிபியா 61.5 ஆண்டுகளும் கஜகஸ்தான் 73.3 ஆண்டுகளும், நைஜீரியா 41.5 ஆண்டுகளும் எண்ணெய் எடுக்க முடியும். ஏற்கனவே இருக்கும் எண்ணெய்க் கிணறுகள் வறண்டு வரும் வேளையில், புதிய எண்ணெய்க் கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டு வருவது ஆறுதலான செய்தி.
No comments:
Post a Comment